Home Top Ad

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்த...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் - இவுங்கள நம்பமுடியலையே....எங்கயோ இடிக்குதே!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை, கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு, காவிரி அமைப்பின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால், அணைகளில் உள்ள நீரை பயன்படுத்த, காவிரி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், மத்திய அரசின் வரைவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

மேலும், கர்நாடகாவில் தற்போது, புதிய அரசு இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகத்தை பெங்களூருக்குப் பதிலாக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், காவிரி நதிநீர் பங்கீடு அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியிருந்தது. இந்த கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீட்டு அமைப்புக்கான பெயரை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு குழுவுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட ஆட்சேபனை இல்லை என கூறினார்.இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வாரியத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே தமிழகமோ, கர்நாடகமோ அணைக் கட்டக் கூடாது என்றும், நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்ற அம்சத்தை ஏற்க முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், காவிரி அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்யவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கேரளா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி நீரில் கேரளாவுக்கு 4 சதவீத நீர் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், காவிரி அமைப்புக்கான செலவில் 15 சதவீதத்தை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். இது தொடர்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

0 coment�rios: