டிவிட்டர் பதிவு
அந்த மதபோதக அமைப்பின் சென்னை கிளை, கமல் அவர்களின் அலுவலகத்திற்கு அருகிலேயே இருப்பதால், இவர் கூறுவது சரி என்று பலர் நம்பி வருகின்றனர். ஆனால், அதில் கமலின் இணையதளம் maiyam.com என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. கமலிற்கு 'Maiyam.com private limited' என்று ஒரு நிறுவனம் இருந்தாலும், அது சார்பாக 'maiyam.com' என்ற இணையதளம் பதியப்பட்டிருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்காகப் பதியப்பட்ட ஒரே தளம் 'maiam.com' மட்டுமே. அது எந்த மதபோதக அமைப்பின் கீழும் வரவில்லை.
அது மட்டுமின்றி, இன்டர்நெட் டொமைன்களை பொறுத்துவரையில், ஓர் இணையதள முகவரி தற்போது யார் கையில் இருக்கிறதோ, அவரே அதன் உரிமையாளர் என்று காட்டப்படும். அதே இணையதள முகவரியை அதற்கு முன்னர் யார் யாரெல்லாம் வைத்திருந்தார்கள் என்று கண்டறிவது கடினம். அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால், 'maiyam.com' என்பது முதலில் கமல் பெயரில் இருந்து பின்னர் அது 'maiam.com' ஆனதால் புதுப்பிக்கப்படாமல் விட்டிருக்கலாம். அதை இந்த மதபோதக அமைப்பு வாங்கியிருக்கலாம்.
maiam.com இணையதள உரிமையாளர் விவரம்
உதாரணமாக, நீங்கள் 'raju.com' என்று ஓர் இணையதள முகவரி வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அதன் உரிமையாளர் யாரெனத் தேடினால் உங்கள் பெயர் வரும். ஆனால், அதற்கான காலம் முடிந்தபின், அதை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் அது வேறு ஒருவர்க்கு விற்கப்படும். இப்போது அதன் உரிமையாளரைத் தேடினால், அது வேறொருவரின் பெயரை காட்டும். அதே முகவரியை நீங்கள் திரும்ப வாங்க வேண்டும் என்றால், அதை வாங்கியவருடன் பேரம் பேசி அதிக விலை தர வேண்டியிருக்கும். இப்படி காலாவதியான இணையதள முகவரிகளை வாங்கி, பின்னர் அதிக விலைக்கு நமக்கே விற்க ஒரு பெருங்கூட்டம் உண்டு. இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனமே ஒருவரிடம் தனக்கு சொந்தமான இணையதள முகவரி ஒன்றை இழந்து பின்பு, அதிக விலை கொடுத்து மீட்டிருக்கிறது. அது போல ஒரு குளறுபடியாக இது இருக்கலாம்.
சில தளங்களின் உதவியுடன் எந்த ஒரு இணையதளத்தின் உரிமையாளர் யார் என்ற விபரங்களை எவர் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளமுடியும். அந்த இணையதளம் யார் பெயரில் இருக்கிறது? அவருடைய முகவரி, இமெயில் ஐடி, மொபைல் எண், அவர் வேறு என்னென்ன தளங்களை பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு க்ளிக்கில் மொத்த ஜாதகத்தையும் கொட்டிவிடும். இதைப் பயன்படுத்திதான் அ.தி.மு.கவின் ஐடி விங்கைச் சேர்ந்த ஒருவர் கமலின் மையம் தளம் சில மத அமைப்புகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிவந்தார். ஆனால் கமல் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Maiam.com க்கு பதிலாக maiyam.com என்று தவறான ஸ்பெல்லிங்கில் தேடியதால் மொத்தத் தகவலும் கமலின் தளம் பற்றிய தகவலாக இல்லாமல் maiyam.com பற்றிய விபரங்கள் பற்றியதாக அவருக்கு கிடைத்திருக்கிறது. maiyamம் கதையோ அப்படியிருக்க, maiamன் கதை வேறு மாதிரியாக இருக்கிறது.
சரி உண்மையில் maiam.com ன் ஜாதகம் என்ன சொல்கிறது? maiam.com என்ற இணையதளம் 1999 ல் இருந்து செயல்பட்டு வருகிறது. அப்போது இந்த இணையதளம் இத்தாலியைச் சேர்ந்த Maia Marrison என்ற ரியல் ஸ்டேட் ஏஜெண்ட் ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்தது. 2008 க்கு பிறகு அந்த சைட் ஆக்டிவாக இல்லை. இந்தத் தகவலின்படி 2018 ஜனவரியில் தான் அந்த இணையதளம் விற்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில்தான் தற்போது கமல் கட்சியின் அதிகாரப்பூர்வ தளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளம் மைலாப்பூர் அட்ரஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு maiyam.com என்ற இணையதளம் செயல்பாட்டிலேயே இல்லை. வெறும் ஸ்பேம் சைட்டாகத்தான் இருக்கிறது.
0 coment�rios: