Home Top Ad

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி. ஆர்.புதூர் அரசு மேல்...

'சிஸ்டம் சரியில்ல.. எல்லாத்தையும் மாத்தணும்'.. ஒரு 'ராட்சசி'யின் அதிரடி அப்ரோச்!

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.

ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.

இப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார்.

இதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா?. தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை. அப்படி இந்த ராட்சசி யார்? எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார்? என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.

நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது.

"டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்", "நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது.

'நம்ம ஸ்கூல்லயும் இப்படி ஒரு டீச்சர் இருந்தாங்கள்ல' என ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு கேரக்டரும். பள்ளி பருவத்தில் டீச்சர் மீது ஈர்ப்புக்கொள்ளும் கதிர்கள் தான் எத்தனை எத்தனை. 'நான் உங்கள பொண்ணு பாக்க வரட்டுமா' என கேட்டு ஹைக்கூ கவிதையாய் இடையே வந்துபோகிறான் அந்தக் குட்டி பையன்.

அரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.

'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒரு ராட்சசி இருந்தாலே' என உதடுகள் முணுமுணுக்கின்றன ஜோதிகாவை திரையில் பார்த்ததும். 'காக்க காக்க' மாயா டீச்சருக்கும், ராட்சசி கீதா ராணிக்கும் இடையே உள்ள காலகட்டம் தான் ஜோதிகாவின் நடிப்பில் தெரியும் முதிர்ச்சிக்கு காரணம். ஸ்டிரிக்ட் தலைமை ஆசிரியர், திறமையான ராணுவ அதிகாரி, அன்பான மகள், காதலின் வலியை மனதில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண பெண் என பல பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.

அப்பாவின் மறைவுக்கு பிறகான காட்சிகளில் அத்தனை அழுத்தமான நடிப்பு ஜோ. அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் வியர்க்குது. தன்னை சுற்றியே படம் நகர்கிறது என்பதை உணர்ந்து, நடிப்பு நெடியை எங்கும் தூக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், துறுதுறு ஜோதிகாவின் சீன்களை அதிகப்படித்தியிருந்தால் 'ஜோ' பேன்ஸ் ஹேப்பி எமோடிகான் போட்டிருப்பார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் எதுக்கோ அடிபோட்றாப்ல தெரியுதே. ஏதோ நல்லது நடந்து சிஸ்டம் மாறினா சரி.

கொஞ்ச நேரமே வந்தாலும் நம் பழைய பாசமான ஆசிரியரை நினைவுப்படுத்திவிட்டு போகிறார் பூர்ணிமா பாக்யராஜ். ஹரீஷ் பிதாரியும், கவிதா பாரதியும் வில்லன் ரோலுக்கு கச்சிதம். பள்ளி இண்டர்வெல் பிரேக் போல், அவ்வப்போது வந்து சிரிப்புகாட்டிவிட்டு போகிறார் பிடி மாஸ்டர் சத்யன்.

பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் சியன் ரோல்டன். ஜோதிகாவின் அப்பா இறக்கும் காட்சியில் பின்னால் ஒலிக்கும் இசை கல் மனதையும் கரைத்துவிடுகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப் பீட்சையும் ஜோவுக்காக ஒலிக்க விட்டிருக்கிறார்.

பிராமாண்ட அரசு பள்ளி, ஓட்டு வீடு, ராணுவ பயிற்சி பள்ளி என இடத்துக்கு தகுந்த மாதிரி பயணித்திருக்கிறது கோகுல் பினாயின் கேமரா. பிளோமின்ராஜின் எடிட்டிங்கில் குறையேதும் இல்லை.

பள்ளி பற்றிய படம்னாலே, மாவட்ட விளையாட்டு போட்டிகள், அதில் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் இடையே மோதல், கோல்மால் செய்து தான் தனியார் பள்ளிகள் ஜெயிக்கும் என்பது போன்ற டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு பள்ளியாக இருந்தாலும் அதில் படிப்பவர்கள் நம்பிள்ளைகள் தானே.

சுற்றி சுற்றி இங்கு சிஸ்டம் சரியில்லை என்பதைத் தான் அழுத்தமாக சொல்லுகிறது படம். ஆனால் ஒரேயொரு கீதா ராணியால் மட்டும் அந்த சிஸ்டத்தை மாற்ற முடியும் என காட்டியிருப்பது ஏற்புடையது தானா இயக்குனரே. படத்தில் சொல்வது போல் கவுரவத்துக்காக தானா நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்?. அதையும் தாண்டி இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, குறைந்த கல்விக்கட்டணத்தில் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

இருந்தாலும் இதேபோல் இன்னும் நூறு படங்கள் வந்தாலும் இந்த 'ராட்சசி'யை ரசிக்கலாம்.

0 coment�rios: