Home Top Ad

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தரா...

ரஜினிக்கே ரெட் கார்டு போட்டவர்... பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்!

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் நுழைந்தவர் சிந்தாமணி முருகேசன். விநியோகஸ்தர்கள் என்பவர் யார் ? அவர்களுடைய பவர் என்ன என்பதை திரைத்துறையினருக்கு காட்டியவர் அவர்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களை அவர் விநியோகித்தார். சென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 16 முறை தலைவராக பொறுப்பு வகித்தவர்.

சிந்தாமணி முருகேசன் பற்றிய பல தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு காலத்தில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அலறவிட்டவர். அதில் மிக முக்கியமானது ரஜினிக்கு ரெட் கார்டு போட்டது.

உழைப்பாளி படத்துக்கு சம்பளத்துக்கு பதிலாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை ரஜினி கேட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்திற்கு ரெட் கார்டு போட்டார் முருகேசன். அந்த சமயத்தில் இது தான் நாளிதழ்களின் தலைப்பு செய்தி.

கமல் உள்ளிட்டோர் அறிக்கைப் போர் நடத்தியும் கொஞ்சமும் இறங்கி வரவில்லை சிந்தாமணி முருகேசன். கடைசியாக வேறு வழியே இல்லாமல், ரஜினியே விநியோகஸ்தர் சங்க அலுவலகத்துக்கு நேரில் சென்று சமாதானம் பேசினார். அதன் பிறகு உழைப்பாளி படம் மீதான தடையை நீக்கினார் அவர்.

இப்படிப்பட்ட சிந்தாமணி முருகேசன் இன்று காலமாகிவிட்டார். 80 வயதான அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மாலையில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, சிந்தாமணி முருகேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது

0 coment�rios: