அமெரிக்கப் பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து இப்போது கிடைக்கிறது. அது `பெண்களுக்கான வயாக்ரா' என்று புகழப்படுகிறது.
அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA), வைலீசி (Vyleesi) என்ற மருந்துக்கு அனுமதி அளித்திருப்பது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்தது.
ஆனால் அடுத்து வந்த வாரங்களில், அது மீண்டும் விவாதமாக உருவெடுத்தது. ஆசைகள் என்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றன.
இந்த மருந்து பிரமெலனோடைட் எனப்படுகிறது - வைலீசி என்பது அதற்கான வணிகப் பெயர்.
மாதவிலக்கு நிற்பதற்கு முந்தைய அல்லது மாதவிலக்கு நிற்கும் பருவத்திற்கான அறிகுறி இல்லாத - ஆனால் பாலுறவில் நாட்டம் இல்லாத குறைபாடு (எச்.எஸ்.டி.டி.) உள்ள இளம்பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்காக இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தொடர்ந்து பாலுறவில் நாட்டம் இல்லாத நிலைதான் இது என்று சிகிச்சை மருத்துவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவத்தில் உள்ள பெண்களில் 6 முதல் 10 சதவீதம் பேர் வரை இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்?
`பெண்களுக்கான வயாக்ரா' தயாரிப்பதில் மருந்து தயாரிக்கும் துறையினர் இரண்டாவது முறையாக இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த மருந்தின் செயல்திறன் பற்றி டாக்டர்கள் சந்தேகங்கள் எழுப்பியதால், மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்துகளை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் டாக்டர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எனவே, உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனுடன் தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?
ஊசி மருந்துகளும் மாத்திரையும்
வைலீசி - என்ற இந்த மருந்து பாலட்டின் டெக்லானஜிஸ் என்ற நிறுவனம் தயாரித்து அமாக் மருந்து நிறுவனத்துக்கு உரிமம் தரப்பட்டுள்ளது. தானாகவே ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் மருந்தாக இது உள்ளது.
இந்த மருந்து பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டோப்போமைன் அளவை அதிகரிக்கச் செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது. ஸ்பிரவுட் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் விற்று வரும் அட்டியி (Addyi) என்ற மருந்துடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். அட்டியி மருந்து 2015ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை, தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அட்டியி மருந்தில் ``குறைந்தபட்ச அளவுக்கு தான் பலன் உள்ளது'' என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்த முடிவு சர்ச்சைக்கு உள்ளானது.
பெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்? '
அட்டியி பயன்படுத்தும் போது மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று ஆரம்பத்தில் ஆலோசனை கூறப்பட்டதைப் போல வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
இது லேசான பக்க விளைவுகள் கொண்டது, வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் அந்த நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், மருந்து மற்றும் மருந்துவ தொழில்நுட்ப துறைகள் பற்றி செய்திகளைக் கவனித்து வரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங் இதுகுறித்துக் கேள்விகள் எழுப்புகிறார் : ``பாலுறவு கொள்வதற்கு, குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர், பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் இப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.''
மவுனத்தில் அனுபவிக்கும் துன்பம்
2016ல் நடத்திய ஒரு ஆய்வின்படி, எச்.எஸ்.டி.டி. பிரச்சினை அமெரிக்க பெண்களில் 10-ல் ஒருவருக்கு ஏற்படுகிறது, அவர்களில் பலர் ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்று தெரிய வந்துள்ளது.
``இந்தப் பெண்களில் பலர் மவுனத்திலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதாவது, இந்த மருந்துக்கு உண்மையிலேயே ஒரு சந்தை கிடையாது'' என்று அமாக் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வில்லியம் ஹெய்டென் கூறுகிறார்.
பெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்?
ஆர்ம்ஸ்டிராங் கூட சந்தேகமாகத்தான் சொல்கிறார் : ``பெண்களுக்கு எச்.எஸ்.டி.டி. என்பது ஒரு நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்கிற்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் லீரின்க் நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் வைலீசி மருந்து ஆண்டு விற்பனை 1 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று அந்தத் துறையினர் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் அட்டியி மருந்து பரிந்துரை மே மாதத்தில் 400 சதவீதம் அதிகரித்துள்ளது (கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடும்போது) என்று புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனம் கூறியுள்ளது. மொத்தம் 3000 அளவை எட்டியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை அதிகரித்திருக்கிறது என்றாலும், மாதந்தோறும் பத்து லட்சம் பரிந்துரைகளைப் பெறும் வயாக்ராவுடன் எந்த வகையிலும் இதை ஒப்பிட முடியாத நிலை உள்ளது.
சர்ச்சை
பெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்?
பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு நடுத்தரம் முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது என்று அமாக் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் அறியப் பட்டுள்ளன.
எச்.எஸ்.டி.டி. குறைபாட்டுக்கு ``சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை பெண்களுக்கு அளிப்பதாக'' இது இருக்கிறது என்று எப்.டி.ஏ. நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
``அறியப்படாத காரணங்களால், பாலுறவில் நாட்டம் கொள்ளாத பெண்கள் இருக்கிறார்கள், இது கவலைதரக் கூடிய விஷயம்'' என்று எப்.டி.ஏ. கூறியுள்ளது. ``இப்போது அந்தப் பெண்கள் பாதுகாப்பான, செயல்திறன்மிக்க மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும். இந்தப் பாதிப்பு உள்ள பெண்களுக்கு, மற்றொரு சிகிச்சை வாய்ப்பு கிடைக்கும் வகையில், இன்றைய அங்கீகாரம் அமைந்துள்ளது'' என்றும் எப்.டி.ஏ. குறிப்பிட்டுள்ளது. ஆனால் வைலீசி மருந்து பாலுறவு ஆசை அல்லது கவலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மூளையில் எந்த வகையில் செயல்படுகிறது என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் எப்.டி.ஏ. கூறியுள்ளது.
எச்.எஸ்.டி.டி.-க்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த மருந்து தான் சிறந்ததா என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன - பாலுறவு உந்துதல் குறைவாக இருப்பது வெளிப்புற மற்றும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எச்.எஸ்.டி.டி. குறித்து சமீபத்தில் எப்.டி.ஏ. குழுவில் இடம்பெற்ற பெரும்பாலான டாக்டர்கள் அட்டியி மருந்தின் பின்னணியில் உள்ள ஸ்பிரவுட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வைலீசி மருந்தின் நீண்டகால பாதிப்புகள் பற்றி எப்.டி.ஏ. பரிசீலிக்கவில்லை என்று பெண்கள் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் கூறியுள்ளன.
மருத்துவப் பரிசோதனைகள்
பெண்களுக்கான புதிய வயாகரா சர்ச்சைக்குள்ளானது ஏன்?
``அட்டியி மருந்தைப் போல, வைலீசி மருந்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது நல்ல செய்தி'' என்று உடல்நல ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் டயானா ஜுக்கர்மேன் வாஷிங்டன் போஸ்ட் -க்கு தெரிவித்துள்ளார்.
``இந்த மருந்தைப் பற்றிய நீண்ட கால பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்பதால், இதன் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எதுவும் தெரியாது என்பது கெட்ட செய்தி'' என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான நோயாளிகள் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தியது இல்லை.
மருந்தில்லா சிகிச்சை மூலம் 17 சதவீதம் பேருக்கு பாலுறவு விருப்பம் அதிகரித்தது என்ற நிலையில், இந்த மருந்து எடுத்துக் கொண்டவர்களில் 25 சதவீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும் இதில் 20 சதவீதம் பெண்கள் பாதியில் விலகிவிட்டனர் என்று - இதில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவப் பரிசோதனை நிறுவனமான மகளிர் உடல்நல ஆராய்ச்சிக்கான கொலம்பஸ் மையம் கூறியுள்ளது. குமட்டல் காரணமாக விலகிய 8 சதவீதம் பேரும் இதில் அடங்குவர் என்றும் குறிப்பிட்டுள்ளது
Follow Us