Home Top Ad

இந்த ஞாயிற்றுக்கிழமை ஜியோ யூஸர்களுக்கு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்திருக்கும், குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு. ஜியோ பயனர...

கேட்ஜெட்ஸ் லீக் ஆன மொபைல் மற்றும் ஆதார் எண்கள்... ஹேக் செய்யப்பட்டதா ஜியோ டேட்டாபேஸ்?

இந்த ஞாயிற்றுக்கிழமை ஜியோ யூஸர்களுக்கு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்திருக்கும், குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு.

ஜியோ பயனர்களின் தகவல்கள் ஒரு இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாக சிலர் ட்வீட் செய்தனர். அந்த லிங்க்கில் இருந்த இணையதளத்தில் ஜியோ பயனர்களின் எண்களுக்கு நேராக அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. யூஸர்களின் பிறந்த நாள், மொபைல் எண்கள், ஜியோ வாங்கியபோது கொடுக்கப்பட்ட மற்ற எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் வரை  அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளம் பட்டியிலிட்டது. இதைத் தொடர்ந்து, ஜியோவின் டேட்டாபேஸ் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ட்விட்டரில் ஜியோவின் வாடிக்கையாளர் சேவை ஹேண்டிலை மென்ஷன் செய்து “என்ன ஆச்சு” என கேள்விகள் வேகமாக குவிந்தன.

    Is that true jio get hack @reliancejio @JioCare
    — Asutosh Patel (@asutosh407) July 9, 2017

பல கேட்ஜெட்ஸ் இணையதளங்கள் உடனடியாக அந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் உண்மைதானா என்ற சோதனையில்  இறங்கின. சில சமயம், பொய்யான தகவல்களை பட்டியிலிட்டுவிட்டு, “உங்கள் மொபைல் எண்ணை எண்டர் செய்து சோதனைச் செய்யவும்” என வலை விரிப்பார்கள். நாமும், பாதுகாப்பு கருதி நமது தகவல்களை கொடுத்து செக் செய்வோம். இறுதியில், அவர்கள் சொன்ன தகவல்கள் தவறாக இருக்கும். ஆனால், நம்மிடம் இருந்து உண்மையானத் தகவல்களை அப்போது வாங்கியிருப்பார்கள். (ருத்ரா படம் பார்த்தவர்களுக்கு பாக்யராஜ் செய்யும் அந்த திட்டம் நினைவுக்கு வரலாம்)  ஜியோ ஹேக் என்பதும் அது போன்ற ஒரு திட்டமாக இருக்கலாம் என ட்விட்டரில் சிலர் குறிப்பிட்டார்கள். ஆனால், இந்த இணையதளம் சொன்னத் தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்திருக்கின்றன.

ஜியோவின் மொத்த டேட்டாபேஸும் இவர்கள் கைக்கு கிடைக்கவில்லை. பல பயனர்கள் தங்கள் எண்ணைத் தேடிப் பார்த்து ‘அதில் இல்லை’ என ட்வீட் செய்திருந்தார்கள். ஆனால், 70% பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மொபைல் ஆப்ஸ் டெவலப்பர் பாலாஜியிடம் கேட்டபோது ”ஜியோவின் டேட்டாபேஸை அவ்வளவு எளிதில் ஹேக் செய்திருக்க முடியாது. லீக் ஆகியிருக்கலாம். அல்லது, ஜியோவின் ஆப்ஸ் எதன் மூலமாவது இந்தத் தகவல்களை திருடியிருக்கலாம். ஜீயோ ஆப்ஸ், தேர்ட் பார்ட்டி சேவைகளை அனுமதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றார்.

இந்தத் தகவல்களை எடுப்பதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியை முன் வைத்தோம்.

“சில ஹேக்கர்கள் தங்கள் ‘திறமையை’ நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் காட்டுவதற்காக செய்வார்கள். முக்கியமான தகவல்கள் கிடைத்தால், அதை விற்கலாம். நம் மொபைல் எண்களை பணம் கொடுத்து வாங்க பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. அதற்காக ஹேக் செய்யலாம்” என்றார் பாலாஜி.

ஜியோ யூஸர்களின் தகவல்களை வெளியிட்ட இணையதளம் மும்பையில் இருந்து செயல்பட்டிருக்கிறது. இப்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது.


இது பற்றி ஜியோவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜியோவின் டேட்டா எதுவும் ஹேக் ஆகவில்லை. இந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் தவறானவை. அதனால், ஜியோ யூஸர்கள் யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை. இது பற்றிய விசாரணை நடந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சொல்லியிருக்கிறார்.

ஜியோ எண்ணுடன் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதை விட முக்கியமாக நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். ஒருவேளை, தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதை பயனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மூடி மறைப்பது மேலும் பல குழப்பங்களுக்குத்தான் வித்திடும்.

0 coment�rios: