Home Top Ad

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும...

அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையில் இறைவனின் வடிவத்தை வணங்குவது, இந்தியர்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை. தூணிலும் துரும்பிலும் உறைபவன் இறைவன் என்பதை நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சிவலிங்க வடிவத்தை உணர்த்தும் மலைகளும், பாறைகளும், புற்றுகளும் ஏன் சோற்றுப் பருக்கையும்கூட நம் வழிபாட்டுக்கு உரியவை. அனலாக அண்ணாமலையில் எழுந்த ஈசன், பனியாக எழுந்தருளும் தலமே அமர்நாத். இந்தத் தலத்தில் ஈசன் பனிலிங்க வடிவில் திருக்காட்சி அருள்கிறார். உலகாளும் ஈசனின் இருப்பிடமாக இமயம் இருந்துவருகிறது. அங்குத் தோன்றும் நதிகள், நதியில் கிடைக்கும் கற்கள், விருட்சங்கள் யாவுமே சிவவடிவாகக் காட்சியளிக்கின்றன. இமயத்தின் இதயப் பகுதியில் அமைந்த அமர்நாத் பனிலிங்கக் குகைக்கோவில் 5,000 ஆண்டுகள் பழைமையானது. சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை எடுத்துரைத்த புண்ணிய இடம் என்று இது போற்றப்படுகிறது. சக்தி தேவியின் தொண்டை விழுந்த இடம் என்றும், அதனால் இது ஆதி சக்தி பீடங்களில் ஒன்று என்றும் வடநாட்டு பக்தர்களால் கூறப்படுகிறது.

இமயத்தின் அடியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது அமர்நாத் பனிக்குகைக் கோயில். கடுமையான வானிலைகள், உயிரை வாட்டும் ஆபத்தான மலையேற்றங்கள், உடலை கிடுகிடுக்க வைக்கும் பனிப்பொழிவு, ஆக்சிஜன் குறைபாடு, தீவிரவாத அச்சுறுத்தல்கள்... என இந்தப் பயணம் முழுக்கவே சவாலாக இருந்தாலும், ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதாவது, இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கி, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில், இரு நாள்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

உடலும் மனமும் ஒத்துழைக்கவேண்டிய கடுமையான பயணம் அமர்நாத் பனிலிங்க தரிசனப் பயணம். ஸ்ரீநகரிலிருக்கும் ராணுவ மருத்துவமனை முகாமில் ஒவ்வொரு பக்தரின் உடல்தகுதியைப் பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் இருப்பவர்களை இந்தப் பயணத்தில் அனுமதிப்பதில்லை. மேலும், இந்த யாத்திரையில் பங்கு பெற ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. பொதுவாக 2,000 முதல் 2,500 எண்ணிக்கையுள்ள பக்தர்களை தனிக்குழுவாக அனுப்பிவைப்பார்கள். ஸ்ரீநகரிலிருந்து பாகல் காவ் என்ற இடத்தைப் பேருந்தில் அடைய வேண்டும். அங்கிருந்து அமர்நாத் நடைப்பயணம் தொடங்கும். வழியெங்கும் கடுமையான பனிப்பொழிவு வாட்டினாலும் இயற்கையின் அழகு, சோர்வைப் போக்கிவிடும். பாகல் காவில் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். அங்குச் சுவையான ரொட்டிகள் யாத்ரீகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

நடக்க முடியாதவர்கள் இங்கு டோலி அல்லது கோவேறுக் கழுதைகளின் மீது பயணிக்கலாம். சந்தன் வாரி, சேஷநாத் பகுதிகளைக் கடந்து சென்றால் அமர்நாத் குகையை அடையலாம். வழியெங்கும் லங்கர் என்னும் தங்குமிடம் உண்டு. நீருக்குச் சுவையான ஓடைகள் தென்படும். மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே இருப்பதால், உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் பயணத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நமது ராணுவ வீரர்கள் இருப்பதால், அவர்களை உதவிக்கு அழைக்கலாம். இந்தப் பயணத்தில் ஆக்சிஜன் குறைவால் சிலர் மரணமடைந்ததும் நிகழ்ந்திருக்கிறது. எனவே, நிதானமாகத் தகுந்த ஆயத்தங்களோடு பயணம் செய்யவேண்டியது அவசியம். கை, கால் உறைகள், குல்லாய், ஷூ, ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை இந்தப் பயணத்தில் அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆங்காங்கே தரப்படும் ஜல்ஜீரா என்ற மருத்துவக் குணம் கொண்ட பானத்தை அருந்துவது நல்லது.

எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடந்தால், பனி படர்ந்த மலையின் மத்தியப் பகுதியில் பெரிய குகை தென்படும். குகைக்குள் நுழைந்து உள்ளே சென்றால் அமர்நாத் லிங்கேஸ்வரன் பனிக்கட்டி வடிவில் காட்சியளிப்பார். பெரிய மேடையில் திரிசூலமும், குளிர்ந்த சூழலில் பிரமாண்ட பனிலிங்க வடிவும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். தரிசிப்பவர்கள் எல்லோரும் தங்களை மறந்து `ஓம் நமசிவாய', `ஹர ஹர மகாதேவ்', `ஜெய் சிவாய' ,`ஜெய் போலேநாத்'... என்றெல்லாம் பரவசத்துடன் முழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எந்தத் தடையுமின்றி பனிலிங்க நாதரை பக்தர்கள் பரவசத்தோடு தரிசிக்கலாம். அண்டங்களையெல்லாம் ரட்சிக்கும் இந்த ஆதிசிவனின் வடிவத்தைக்கொண்டே பலர் இங்கு ஆரூடம் கணிப்பார்கள். சிவலிங்கம் எத்தனை பிரமாண்டமாக உள்ளதோ, அத்தனை செழிப்பு நாட்டில் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 1945-ம் ஆண்டில் அமர்நாத்தில் விஸ்வரூப பனிலிங்கம் உருவானது. அதன் பிறகுதான் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் குறைந்து, உலகில் அமைதி நிலவியது என்கிறார்கள்.

புராண காலத்திலிருந்தே இந்த அமர்நாத் பனிக்குகை மற்றும் பனிலிங்கம் இருந்து வந்தாலும் காலப்போக்கில் இதன் புகழ் யாருக்கும் தெரியாமல் போனது. 16-ம் நூற்றாண்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமியருக்கு இந்தக் குகையும் லிங்கமும் தென்பட்ட பிறகுதான் மீண்டும் வழிபாட்டுக்கு உரியதானது என்கிறார்கள். அதனால் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் வாரிசுகள்தாம் இன்றும் அமர்நாத் குகையை நிர்வகித்துவருகிறார்கள். இந்துக்களோடு இஸ்லாமியர்களும் இந்த அமர்நாத் பனிலிங்கேஸ்வரனைத் தரிசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள், `ப‌ர‌ப்பானி பாபா’ அதாவது, `ப‌னிக‌ட்டி பாபா’ என்று ஈசனை வணங்குகிறார்கள்.

பெருகிவரும் கூட்டம், புவி வெப்பமயமாதல், பக்தர்கள் ஏற்றும் தீப தூபங்கள் போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் வெம்மை கூடி, பனிலிங்கம் சீக்கிரமே உருகிவிடுகிறது என்றும், இது அந்தப் பகுதியின் இயற்கை வளத்துக்கும் கெடுதியானது என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம். பனிலிங்க நாதரை தரிசிக்கும் சகல பக்தர்களும் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்.  

0 coment�rios: