Home Top Ad

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்...

Avengers: Infinity War இந்த கோடை விடுமுறைக்கான கொண்டாட்டம் - திரைவிமர்சனம்

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்கள். அப்படியிருக்க படம் முழுவதும் தன் பேவரட் சூப்பர் ஹீரோக்கள் அனைவரையும் காட்டி, மார்வல் காமிக்ஸ் எடுத்திருக்கும் பிரமாண்ட அவதாரம் தான் Avengers: Infinity War. இந்த பிரமாண்டம் மக்களை மெய் மறக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஆறு இன்ஃபினிட்டி கற்கள் தானோஸ் என்பவனுக்கு வேண்டும். அந்த 6 கற்கள் கிடைத்துவிட்டால் இந்த உலகத்தையே ஒரு சொடக்கில் அழித்து விடும் ஆற்றல் அவனுக்கு கிடைக்கும்.

அந்த கற்களை தேடி தானோஸ் ஒவ்வொரு கிரகமாக வர, அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற டாஸ்க் தான் நமது சூப்பர் ஹீரோக்களுக்கு இந்த பாகத்தில்.

தானோஸின் அரக்கத்தனத்தையும், அவர் ஆற்றலையும் நமது சூப்பர் ஹீரோக்கள் எப்படி கட்டுப்படுத்தினார்கள், மேலும் கட்டுப்படுத்த முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சரி சிம்பிளாக படம் எப்படி? அதை பார்ப்போம். சூப்பர் ஹீரோ படம் என்றாலே கிமு காலத்திலிருந்து உலகம் அழியும், அதை நம் சூப்பர் ஹீரோ தடுத்து நிறுத்துவார். இது பல பாகங்கள் வந்தாலும் பார்முலா ஒன்று தான்.

அதில் இந்த Avengers: Infinity War எப்படி வேறுப்படுகின்றது என்பதே கூடுதல் சிறப்பு. நான் இதில் எந்த பாகமும் பார்த்தது இல்லை, Avengers: Infinity War பார்க்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கின்றது, படத்திற்கு போகலமா என்றால், கண்டிப்பாக போகலாம்.

அதே உலகம் அழிய, சூப்பர் ஹீரோக்கள் சண்டை என ஜாலியாக படம் சென்றாலும், பல எமோஷ்னல் கதைகள் படத்திற்குள் வந்து செல்கின்றது. அதெல்லாம் இந்த சீரியஸ் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கே புரியும், மேலும், படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை தரும்.

தானோஸ் Avengers: Infinity War படத்தின் வில்லன் இல்லை, ரியல் ஹீரோ. ஒரு வில்லனை சமாளிக்க ஒட்டு மொத்த சூப்பர் ஹீரோ படையும் ஒன்று கூடுகின்றது. அப்போதும் சமாளிக்க முடியவில்லை, இரக்கம் துளியும் இல்லாதவன்.

ஆனாலும் தன் மகள் மீது பாசம் வைத்திருப்பது, அவருக்கான காரணங்களை கூறுவது, ஒரு கட்டத்தில் தன் லட்சியத்திற்காக மகளையே பலி கொடுப்பது என தானோஸ் தான் படத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்.

மற்றபடி அயர்ன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, ஸ்ப்டைர் மேன், ப்ளாக் பேந்தர், தோர் என பல சூப்பர் ஹீரோக்கள் தங்களுக்காக கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் சிவில் வார் படத்தில் கேப்டன் அமெரிக்காவிற்கும், அயர்ன் மேனுக்கும் சண்டை வரும்.

அந்த சண்டை குறித்து இந்த Avengers: Infinity War-ல் எந்த ஒரு விளக்கமும் இல்லை, அவர்கள் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, கிளைமேக்ஸும் அடுத்த பாகத்திற்கான மிகப்பெரும் டுவிஸ்ட்டை தான் விட்டு சென்றுள்ளது. சிலருக்கு சுவாரஸியம், சிலருக்கு ஏமாற்றம்.

க்ளாப்ஸ்

படத்தின் விறுவிறுப்பு எங்குமே குறையவில்லை, தானோஸின் அழுத்தமான கதாபாத்திரம்.

மார்வல் காமிக்ஸ் படங்கள் என்றாலே ஜாலியாக தான் செல்லும், வியாபாரத்திற்கான படமாக தான் இருக்கும் என்றாலும், இதில் நிறைய எமோஷ்னல் காட்சிகள் வைத்து கதையை நகர்த்தியுள்ளனர். அது ரசிக்கும் படியாகவும் உள்ளது.

மேலும், அடுத்த பாகத்திற்கான லீட்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தாலும், புதிதாக இந்த படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

மொத்தத்தில் Avengers: Infinity War இந்த கோடை விடுமுறைக்கான கொண்டாட்டம்.

0 coment�rios: