Home Top Ad

ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைக...

எண்ணற்ற புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய அடோப்… அதாங்க போட்டோஷாப்!

ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார் 

பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக்.

அச்சு ஊடகத்தின் கதையையே மாற்றி அமைத்தவர்கள் ஜான் எட்வர்ட் வார்னாக் (John Edward Warnock) மற்றும் சார்லஸ் கெஸ்கே (Charles Geschke). இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ’ஜெராக்ஸ்’ நிறுவனத்தின் பாலோ ஆல்டோ ரிசர்ச் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்த விஞ்ஞானிகள்.

வார்னாக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்தத் தோல்வியில், அவரை வேறு பள்ளிக்கு மாற்ற வைத்தது. தோல்வி கொடுத்த வலி, பள்ளிப் படிப்பு படித்தபின்னும் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றும் தீராமல் அதன்பிறகு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் Ph.D முனைவர் பட்டம் பெறும்வரை தொடர்ந்தது.
படித்து முடித்ததும் சுதர்லாண்ட் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் அதன் பிறகு ஜெராக்ஸ் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் வேலைப் பார்த்தார்.

இவருடைய பல கண்டிபிடுப்புகளை ஜெராக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்.

வார்னாக்கின் மனைவி மார்வா வார்னாக் ஒரு கிராஃபிக்ஸ் டிசைனர். அவருடைய ஆதரவும் இருந்ததால் அவர்களின் கார் நிறுத்தும் கேரேஜ்ஜில் ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்புறமாக அடோப் என்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதன் பெயரையே தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கும் வைத்தார்கள்.

அடோபின் லோகோவை வடிவமைத்தவர் மார்வா வார்னாக் தான். வார்னாக்கும் கெஸ்கேவும் ஜெராக்ஸ் வேண்டாம் என்று தூக்கி எறிந்த இன்டெர்பிரஸ் என்ற பிரிண்டிங் மொழியை புதுபித்து மெருகேற்றினார்கள். அதற்கு போஸ்ட்ஸ்கிரிப்ட் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். அது தான் முதன்முதலில் சர்வதேச தரத்தில் வெளிவந்த பிரிண்டிங் கணினி மொழி. அது ஆங்கிலம் மட்டுமல்லாது பிற மொழிகளுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.

இவர்களின் இந்த மொழி நானூறுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக காரணமாக இருந்தது. இருபதிற்கும் மேற்பட்ட பிரிண்டர் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருளை வடிவமைக்க உதவியது.

இதன்பின் தான் எழுத்துருவில்(Fonts) புதிய மாற்றங்கள் வந்தன. அதுவரை இரண்டே இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே இருந்த நிலையை மாற்றி எண்ணற்ற எழுத்துருக்கள் பல மொழிகளில் உருவாக ஆரம்பித்தன. அதற்கு மூலகர்த்தாவாக அடோப் சிஸ்டம்ஸ்ஸின் போஸ்ட்ஸ்கிரிப்ட் இருந்தது. அதன்பிறகே ஆப்பிள் நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் எழுத்துரு உருவாக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன.

போஸ்ட்ஸ்கிரிப்ட்டின் உதவியால் இவர்களே உருவாக்கிய மென்பொருள் இல்லஸ்ட்ரேட்டரை உபயோகித்து பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல எவர் வேண்டுமென்றாலும் எழுத்துருக்களை உருவாக்கலாம் என்ற நிலை வந்தது. அடோபின் மகத்தான் சாதனை அது.

இந்தக் காலகட்டத்தில் தான் தாமஸ் நோல் மற்றும் ஜான் நோல் சகோதரர்கள் இவர்களிடம் வந்து ஒரு ராஷ்டர் வகை கிராபிக்ஸ் மென்பொருளை டெமோ கொடுக்கிறார்கள். அதுவரை இல்லாத புது மாதிரியாக இருக்கிறது அந்த மென்பொருள். அவர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள். அங்கும் ஸ்டீவ்ஜாப்ஸ் முன்னிலையில் டெமோ கொடுக்கிறார்கள். அவருக்குப் புரிந்துவிட்டது வருங்கால கிராபிக்ஸ் யுகத்தின் அடிநாதமே இந்த மென்பொருள் தான் என்று.

உடனே இரு நிறுவனங்களும் அவர்களுடன் ஒப்பந்தம் போடுகின்றன. அடோப் அந்த மென்பொருளை வாங்கி மேம்படுத்தி வெளியிடப்போகிறது. அதிலும் ஆப்பிள் கணினியில் மட்டுமே வரப்போகிறது. அது தான் போட்டோஷாப். வெளியிட்ட சில நாள்களிலே அது மிகப் பெரிய ஹிட்.

இந்த ஒரு மென்பொருளை வைத்தே அந்நாளில் மில்லியன் டாலர்கள் சம்பாதித்த நிறுவனங்கள் பல. கிராபிக்ஸ் வேலைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400 டாலர்கள் விலை வைத்த காலம் அது. பத்திரிகைகள் புதுமையான அட்டைப்படங்களுடன் வந்தன. விளம்பரங்கள் கற்பனையின் உச்சம் தொட்டன. புகைப்படங்களின் அழகு மேம்படுத்தப்பட்டதோடு புகைப்பட பிழைகள் எளிதில் சரிசெய்யப்பட்டன.

அடோப் நிறுவனத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் சேர அவர்களின் போட்டோஷாப் மென்பொருள் வெகுவாக பயன்பட்டது. நிறுவனத்தின் பங்கும் பல மடங்கு ஏறத் தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் இவர்களுக்கு இணையாக மேக்ரோமீடியா என்ற நிறுவனம் மிக வலிமையாக போட்டி போட்டது.

மேக்ரோமீடியா அடோப்பை விட பல கிராபிக்ஸ் மற்றும் இணைய மென்பொருள்களை கொண்டுவந்தது. இணையப் பொருளாதார வடிவம் எடுக்கும்போது மிகவிரைவிலும், புதுமையாகவும் வடிவமைக்க பயன்படுத்தபட்டவை தான் Dreamweaver, Flash, Fireworks எல்லாம்.

போட்டியாளர்களை நல்ல விலைக்கொடுத்து வளைத்துக்கொள்வதே கார்ப்பரேட் உலகின் தாரகமந்திரம். அதன்படி அடோப், ட்ரீம்வீவரை விலைக்கு வாங்கியது. இந்த இணைப்பு பிரிண்டிங் மற்றும் இணைய மென்பொருள் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக அடோபை மாற்றியது. அது இன்றுவரை தொடர்கிறது.

இவர்களின் மென்பொருள் இல்லாத கணினியே இல்லை. பயன்படுத்தாக மனிதர்களே இல்லை; நிறுவனங்களே இல்லை என்பதை இன்னொரு குட்டி டாகுமென்ட் வகை துணை மென்பொருள் உறுதிசெய்தது. அது தான் PDF File. இதன் வடிவமைப்பில் வார்னாக்கின் பங்கு அதிகம். அவர் உருவாக்கிய கேம்லாட் என்ற மென்பொருள் தான் பின்னர் PDF ஆக உருவாகியது. இன்று இது ஒரு சர்வதேச தர உறுதிபாடு கொண்ட பார்மெட். எல்லா அரசாங்க கோப்புகளிலும் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அடோப் அதோடு நிற்கவில்லை. வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றுக்காகவும் அடோப் பிரீமியர், ஆப்டர்-எப்பெக்ட் போன்ற மென்பொருள்களை கொண்டுவந்தார்கள். இவை வந்த பிறகே கல்யாண வீடுகளில் புதுக் கலாசாரம் உருவாகியது. வீடியோ எடுக்கும் போதே கிராபிக்ஸ் செய்து மாப்பிள்ளை பொண்ணுக்கு இதயம் வரைந்து அம்புவிட்டார்கள். மணமேடையில் இருக்கும் போதே வீடியோவில் சுவிட்சர்லாந்துக்கு பறக்கவிட்டார்கள்.

எண்ணற்ற, புதுமையான பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியதும் இவர்களின் தயாரிப்புகளே. ஒரு புள்ளிவிவரத்தின் படி மூன்று கோடி வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களின் தயாரிப்புகள் உதவிக் கொண்டிருக்கிறன. இது ஒரு சாதனை.

வருடம் தோறும் ஆறாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் நிறுவனமாக, தவிர்க்க இயலாத நிறுவனமாக இது வளர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக, தலைமை செயல் அதிகாரியாக, சேர்மனாக இருப்பவர் சாந்தனு நாராயண் என்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட்அப் பாடம்

ஜெராக்ஸ் நிறுவனம் மட்டும் வார்னாக்கின் பேச்சை கேட்டிருந்தால் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட அசைக்கமுடியாத, வலிமையான இடத்தை அடைந்திருக்கும். இன்று ஜெராக்ஸ்சும் பெரிய நிறுவனம் என்றாலும் தவிர்க்க இயலாத நிறுவனம் என சொல்லமுடியாது. வார்னாக் தன் படைப்பின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை தான் தன் கண்டுபிடிப்பை நிராகரித்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு புதிய நிறுவனத்தை தொடங்க வைத்தது.

தோல்வியும் நிராகரிப்பும் தடைகற்கள் அல்ல. புதிய பாதையை காட்டும் திசைகாட்டி. அதை புரிந்துகொண்டவர் அந்த புதிய திசையில் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள். சிலர் திரும்பி செல்கிறார்கள். சிலர் அந்த இடத்திலேயே அழுதுகொண்டே காலத்தை கழிக்கிறார்கள். இதில் நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

0 coment�rios: